ஆபிரகாமின் சந்ததி – அல்லாஹ் ஏன் ஆபிரகாமின் சந்ததி பட்டியலை தாறுமாறாக கூறுகிறார்

கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களை ஒரு குறிப்பிட்ட வகையில் பதித்துள்ளேன். இக்கட்டுரையில் சொல்லப்படும் விவரங்கள் தெளிவாக புரியவேண்டும் என்பதற்காக இப்படி பதிக்கப்பட்டுள்ளது. 

குர்-ஆன் ஸூரா 6:83-89:

83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்;

              இதற்கு முன்னர் நாம் நூஹையும் 

              அவருடைய சந்ததியிலிருந்து

              தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன்

             ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்;

             இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.

6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் -

இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

6:86. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் -

இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

6:87. இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.

6:88. இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.

6:89. இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம். (குர்-ஆன் 6:83-89)

அல்லாஹ், பெயர்களின் பட்டியலை கொடுக்கும் போது அவைகளை தாறுமாறாக மாற்றி கொடுக்க காரணம் என்ன? ஏன் குர்-ஆனில் பெயர்கள் ஒரு வரிசை கிரமமாக கொடுக்கப்படாமல் இருக்கின்றது?

மேற்கண்ட நபர்கள் வாழ்ந்த காலங்களின் படி, அவர்களை வரிசைப் படுத்தவேண்டுமென்றால், அவைகளை கீழ்கண்ட விதமாக வரிசைப்படுத்தி பட்டியலிடவேண்டும்.  

ஆபிரகாமின் சந்ததியிலிருந்து:

இஸ்மாயில், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, ஆரோன், மோசே, தாவீது, சாலொமோன், எலியா, எலிஷா, யோனா, ஜகரிய்யா, யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசு.

இது குர்-ஆனின் மிகப்பெரிய பிழை என்று சொல்லமுடியாது, ஆனால், சர்வத்தையும் அறிந்த அல்லாஹ்விற்கு எப்படி இந்த குழப்பம் வந்தது என்பது தான் கேள்வி?

குர்-ஆனின் இவ்வசனங்கள் பற்றி பல கேள்விகள் எழுகின்றன:

முதலாவதாக, லோத்தும் யோபுவும் ஆபிரகாமின் சந்ததி இல்லை என்பதை கவனிக்கவும். லோத்து ஆபிரகாமின் சகோதரனுடைய மகன் ஆவார், தனக்கு பிறந்தவரல்ல. ஆபிரகாம் இஸ்ரவேல் நாட்டிற்கு சென்ற போது, அவரோடு கூட சென்றவர் தான் லோத்து. இந்த நேரத்தில் ஆபிரகாமுக்கு பிள்ளைகள் பிறக்கவில்லை (பார்க்க ஆதியாகமம் 11:27-30, 12:4-5).

அடுத்தபடியாக, யோபுவைப் பற்றி பார்ப்போம். இவரைப் பற்றி அதிகமாக விவரங்கள் கொடுக்கப்படவில்லை என்றாலும், இவர் வேறு ஒரு நாட்டில் / இடத்தில் வாழ்ந்தவராவார். இவர் ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர் அல்ல.  குர்-ஆனின் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ள வகையை கூர்ந்து கவனித்தால், அவைகள் ஆபிரகாமைப் பற்றியும், அவரது சந்ததியில் வந்தவர்கள் பற்றியும் பட்டியலிட்டுத் தருகின்றது. இந்த பட்டியலில் உள்ளவர்களோடு ஆபிரகாமுக்கு ஒரு உறவுமுறை இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

நோவா மட்டுமே ஆபிரகாமுக்கு முன்பு வந்தவர். மற்ற பெயர்கள் அனைத்தும் ஆபிரகாமுக்கு பிறகு வந்தவர்கள் என்றும், அவரது சந்ததி என்ற வகையிலும் குர்-ஆன் பேசுகின்றது. 

இதுமட்டுமல்ல, குர்-ஆன் 89ம் வசனம், “இவர்களுக்குத் தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்” என்று சொல்கிறது.

இவ்வசனம் குறிப்பிடும் “வேதம்(the Book) எது?  இதற்கு பதிலாக, ”இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு வேதம் (a Book) கொடுக்கப்பட்டது” என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும் அல்லவா? இவர்கள் அனைவருக்கும் எப்படி ஒரே வேதம் கொடுக்கப்பட்டிருக்க முடியும்? அது எந்த புத்தகம்?

குர்-ஆனின் இதர இடங்களில் வாசிக்கும் போது மோசேக்கு தோரா கொடுத்ததாகவும், தாவீதுக்கு ஜபூர் கொடுத்ததாகவும், இயேசுவிற்கு இன்ஜில் கொடுத்ததாகவும் தனித்தனியாக சொல்லப்படுகின்றது. ஆனால், மேற்கண்ட வசனத்தை படித்தால், இவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது “ஒரே வேதத்தை தானா?” என்ற கேள்வி எழுகின்றது.

இஸ்லாமிய நபி முஹம்மதுவிற்கும் “ஒரு வேதம்/புத்தகம்” கொடுக்கப்பட்டது. அப்படியானால், இந்த கணக்கு சரியாக இருக்குமா? 

இவைகள் அனைத்தையும் ஒரு வேதம்/புத்தகம் என்று அழைக்கமுடியுமா? 

தோரா = ஜபூர் = இன்ஜில் = குர்-ஆன்?

அதாவது தோரா என்றுச் சொன்னாலும், ஜபூர் என்றுச் சொன்னாலும், இன்ஜில் என்றுச் சொன்னாலும், கடைசியாக குர்-ஆன் என்றுச் சொன்னாலும் அது ஒரு புத்தகத்தையே குறிக்கும் என்று கருதமுடியுமா?

(சிலர் ஆம், மேற்கண்ட கணக்கு சரியானது என்றுச் சொல்கிறார்கள், இதைப் பற்றி அறிய இங்கு சொடுக்கி படிக்கவும் - http://www.answering-islam.org/Quran/Versions/004.159.html).

குர்-ஆன் சொல்வது போல “எல்லோருக்கும் ஒரே வேதம் கொடுக்கப்பட்டது” என்று குர்-ஆனுக்கு முன்பு வந்த பைபிளில் சொல்லப்படவில்லையே! வேதக்காரர்களிடம் இருக்கும் தோராவும், ஜபூரும்(சங்கீதம்), இன்ஜிலும் (சுவிசேஷங்கள்) தனித்தனி வேதங்களாகவும், புத்தகங்களாகவும் இருக்கின்றன, அதே போல குறிப்பிடப்பட்டும் இருக்கின்றன. 

யோவான் ஸ்நானகனின் தந்தை ஜகரியாவிற்கு எந்த வேதம் கொடுக்கப்பட்டது? இதுமட்டுமல்ல, யோவான் ஸ்நானகனுக்கு கொடுக்கப்பட்ட வேதம் எது? அதன் பெயர் என்ன? இஸ்மாயிலுக்கு கொடுக்கப்பட்ட வேதம் எது? அதன் பெயர் என்ன?  தேவனுடைய உண்மையான வெளிப்பாடாக இருக்கும் பைபிளின்  படி பார்க்கும் போது, குர்-ஆனின் இவ்விதமான கூற்றுக்கள் அனைத்தும் ஒன்றையொன்று முரண்படுகின்றதை காணமுடியும். இது மட்டுமல்ல, குர்-ஆனின் ஒரு வசனம், இதர வசனங்கள் சொல்லும் விவரங்களோடும் மற்றும் இதர இஸ்லாமிய ஹதீஸ்களோடும் மோதுகின்றன / முரண்படுகின்றன. இந்த ஹதீஸ்கள் அல்லாஹ்விடம் இருக்கும் ”தாய் புத்தகத்திலிருந்து” கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இதே போல ஒரு வசனத்தை நாம் குர்-ஆன் 29:27ல் காணலாம், இதிலும் ஒரு தவறு உள்ளது.

 மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார். (குர்-ஆன் 29:27)

மேற்கண்ட வசனத்தில் வரும் “அவருடைய சந்ததியிலே” என்ற சொற்றொடர் பற்றி பலர் பலவிதமாக கருத்து கூறுகின்றனர்:

  • சிலர், கடைசியாக பெயர் குறிப்பிடப்பட்ட ”யாக்கோபு உடைய சந்ததியிலிருந்து நபித்துவமும், வேதமும் வரும் என்று பொருள் கொள்ளவேண்டும்” என்று கூறுகிறார்கள். 
  • வேறு சிலர் “ஆபிரகாமின் சந்ததி அனைவரிலிருந்தும் நபித்துவமும், வேதமும் வரும்” என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர்.  

நபித்துவம் என்பது ஆபிரகாமின் சந்ததிக்கு உரியது என்று இவ்வசனம் சொல்கிறது. இவ்வசனத்திற்கு முன்புள்ள (29:26) மற்றும் பின்புள்ள (29:28) வசனங்களை கவனித்தால், அதில் லோத்தைப் பற்றி குர்-ஆன் பேசுகின்றது. லோத்து ஆபிரகாமின் சந்ததியும் அல்ல, யாக்கோபின் சந்ததியும் அல்ல என்பதை கவனிக்கவும். இதே போல, யோபுவும், நோவாவும் ஆபிரகாமின் சந்ததிகள் அல்ல. இதனைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்: குர்-ஆன் 16:36ன் முரண்பாடு (எல்லா நாடுகளிலிருந்தும் நபிகளா? அல்லது ஆபிரகாமின் சந்ததியிலிருந்து மட்டும் நபிகளா?)

இன்னொரு பிரச்சனை: இக்கட்டுரையில் பார்த்த வசனத்தின் படி, புத்தகம் (அல் கிதாப் – வேதம்) கொடுக்கப்பவர்களின் பட்டியலில் இஸ்மாயிலும் இருக்கிறார். ஆனால், குர்-ஆன் 6:156-157ன் படி, ”வேதம்” என்பது இவருக்கு முன்பு இரண்டு சமுகத்தாருக்குத் தான் கொடுக்கப்பட்டது, இவர்களில் அரபியர்களின் சமூகம் இல்லை.

6:156. நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;

6:157. அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.

இது எப்படி சாத்தியமாகும்? இதன்படி பார்த்தால், குறைஷிகள் இஸ்மாயிலின் சந்ததியிலிருந்து வந்தவர்கள் இல்லையா? இஸ்மாயிலின் சந்ததிக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை  குறைஷிகள் பெறவில்லையா? இவ்வசனங்களில் உள்ள பிரச்சனைகளை தனிக் கட்டுரையாக பிறகு காண்போம்.

மூலம்:  http://www.answering-islam.org/Quran/Contra/qb012.html

குர்-ஆன் முரண்பாடுகள் பற்றிய கட்டுரைகள்