யாருக்கு முதன்மையான இடம் தரப்படவேண்டுமென இறைவன் கட்டளை கொடுத்தான்? ஏன்?

The Place of Prominence

என் தேவனுக்கு நன்றிகளை செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன், ஏனென்றால் ”இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்” பற்றிய கட்டுரைகளை நான் எழுதும்போதெல்லாம், இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ் எப்படி பைபிளின் தேவனுக்கு முரண்பட்டு காணப்படுகிறார் என்பதை தெளிவாக காண தேவன் உதவி செய்கிறார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், இயேசுவும் முஹம்மதுவும் தம்முடன் இருக்கும் நபர்களிடம் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதைச் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொல்வதானால், இயேசுவும் முஹம்மதுவும் தங்கள் உள்வட்ட சீடர்கள் அல்லது தொழர்களிடம் எப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பை கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லலாம்.

முஹம்மதுவோடு வாழ்ந்தவர்கள் எவ்விதம் முஹம்மதுவிடம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் எதிர்ப்பார்க்கிறது? இதே போல, சீடர்கள் இயேசுவிடம் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று பைபிள் எதிர்ப்பார்க்கிறது? இவைகளைத் தான் இந்த கட்டுரையில் சுருக்கமாக நாம் ஆய்வுச் செய்யப்போகிறோம்.

சஹாபாக்களிடம் அல்லாஹ் எதிர்ப்பார்த்தவைகள்:

முதலாவதாக, முஹம்மதுவிடம் சஹாபாக்கள் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டார்கள் என்பதைக் காணலாம். இந்த விவரத்தை சரியாக புரிந்துக் கொள்வதற்கு குர்-ஆன் சொல்வதைப் படிக்கவேண்டும். குர்-ஆன் பொதுவாக முஸ்லிம்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும், அவர்களின் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி அனேக கட்டளைகளை கொடுத்துள்ளது.  ஆனால், இந்த கட்டளைகளை குர்-ஆன் சுருக்கமாகச் சொல்கிறதே தவிர, அவைகளை தெளிவாக விவரிப்பதில்லை.  உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வை தொழுதுக் கொள்ளும்படி குர்-ஆன் கட்டளையிடுகிறது, ஆனால், ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் என்று சரியான எண்ணிக்கையை அது தெளிவாகச் சொல்வதில்லை. மேலும், தொழுகையின் போது எவைகளை முதலாவது செய்யவேண்டும், எந்த வசனங்களை ஓதவேண்டும்? அடுத்தது என்ன செய்யவேண்டும்? போன்ற தொழுகையின் விவரங்களை கோர்வையாக குர்-ஆன் சொல்வதில்லை. தொழுகையின் முழு விவரமும் நமக்குத் தேவையென்றால், அவைகளை ஹதீஸ்களில் மட்டுமே காணமுடியும். ஆகையால், ஒன்றை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும், அது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட செயலை குர்-ஆன் செய்யச் சொன்னால், அது முக்கியமானது என்று அறிந்துக் கொள்ளவேண்டும், ஆனால், அந்தச் செயலை எப்படி செய்யவேண்டும் என்ற விவரம் மட்டும் குர்-ஆனில் காணப்படாது, அது ஹதீஸ்களில் மட்டுமே காணப்படும், இதனை மனதில் வைக்கவேண்டும். 

முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் சொல்கிறது, ஆனால் அதைப் பற்றி தெளிவான விவரத்தை குர்-ஆன் தருவதில்லை.  உதாரணத்திற்கு, முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறாமல், அவரை விட்டு போகக்கூடாது என்று குர்-ஆன் 24:62ல் சொல்கிறது.  இந்த வசனத்தை கீழே படியுங்கள்: 

குர்-ஆன் 24:62. அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.

இப்போது அடுத்த குர்-ஆன் வசனத்தை கவனியுங்கள். முஹம்மதுவின் வீட்டில் முஸ்லிம்கள் இருக்கும் போது, அவரை அதிகமாக சொந்தரவு செய்யாமல் சீக்கிரமாக சென்றுவிடவேண்டும், அதிக நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது என்று குர்-ஆன் சொல்கிறது. மேலும் முஹம்மது மரித்துவிட்ட பிறகு, அவரது மனைவிமார்களை முஸ்லிம்கள் மறுமனம் செய்துக் கொள்ளக்கூடாது என்றும் இவ்வசனம் கட்டளையிடுகிறது. 

குர்-ஆன் 33:53 முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.

கடைசியாக, முஹம்மதுவிடம் பேசும்போது, மக்கள் தங்கள் சப்தத்தை முஹம்மதுவின் சப்தத்தைவிட உயர்த்திப் பேசாமல், சிறிது குறைவான சப்தத்தில் பேசுங்கள் என்று குர்-ஆன் கட்டளையிடுகிறது. யார் தங்கள் சப்தத்தை முஹம்மதுவின் சப்தத்தைவிட அதிகமாக உயர்த்திப் பேசுகிறாரோ, அவர் செய்த நன்மைகள் (அமல்கள்) இதனால் அழிந்துப்போகும் என்றும் குர்-ஆன் எச்சரிக்கிறது.

குர்-ஆன் 49:2. முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.

இதுவரை கண்ட குர்-ஆன் வசனங்களிலிருந்து ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளமுடியும், அதாவது, முஹம்மது எங்கு இருந்தாலும், அங்கு அவருக்கு சிறப்பான இடம் அல்லது அந்தஸ்து தரவேண்டும் என்று அல்லாஹ் எதிர்ப்பார்க்கிறார் என்பதாகும். இஸ்லாமின் தீர்க்கதரிசி என்ற முறையில் மக்கள் அவருக்கு தனிச்சிறப்பான மதிப்பு தரவேண்டும், மேலும் அவருடன் இருப்பவர்களைக் காட்டிலும் அவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்பதை காட்டக்கூடிய வகையில் மக்கள் நடந்துக் கொள்ளவேண்டும். இது தான் முஹம்மதுவைப் பற்றி குர்-ஆன் முஸ்லிம்களுக்குச் சொல்லும் கட்டளைகளாகும்.  

இயேசுவும் முதன்மையான இடமும்:

ஒருவர் சுயமாகச் சென்று உயர்ந்த இடத்தை பிடிப்பதைப் பற்றி இயேசு எச்சரித்துள்ளார் (லூக்கா 14:8). இப்படி செய்பவர்களுக்கு என்ன நடக்கலாம் என்றும் இயேசு எச்சரித்தார் (லூக்கா 14:11). மேலும் இப்படி சுயமாக முக்கியமான இடங்களை தேடுபவர்களை பின்பற்றவேண்டாம் என்றும் இயேசு கட்டளையிட்டார் (லூக்கா 20:46).

இயேசு இப்பூமியில் இருக்கும்போது, அவர் எப்படி நடந்துக் கொண்டார் என்பதை பார்ப்போம். இயேசு இறைவனாக இருந்தபடியினால், அவரோடு ”யார் இருந்தார்கள்?” என்பது ஒரு முக்கியமில்லாத ஒன்றாகும். இயேசுவோடு யார் இருந்தாலும் சரி, அந்த இடத்தில் இயேசு மட்டுமே மேன்மையானவராக இருப்பார், ஏனென்றால் அவர் இறைவனாக இருப்பதால், அவரை விட உயர்ந்தவர் யாருமில்லை. ஒரு எல்லைக்குள் உட்பட்டு சில ஆண்டுகள் வாழ்ந்து, நிச்சயமாக  மரிக்கக்கூடிய மனிதர்கள் இயேசுவோடு இருந்ததினால், எவ்விதத்திலும் அவர்கள் இயேசுவைவிட முதன்மையானவர்களாக இருக்கமுடியாது. இப்படிப்பட்ட மேன்மைகளை கொண்ட தெய்வமாகிய இயேசு மனிதர்களின் துதி, புகழ்ச்சி, ஆராதனை போன்ற அனைத்துவிதமான கனத்திற்கு பாத்திரராக இருந்தாலும், அவர் தன்னை ஒரு வேலைக்காரன் (ஊழியக்காரன்) என்ற நிலையிலே தம்மை காண்பித்துக் கொண்டார் (மாற்கு 10:45). 

ஒருமுறை இயேசுவின் சீடர்கள், தங்களில் யார் பெரியவராக இருக்கிறார் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது, இயேசு பெரியவராக இருந்தாலும், தம்முடைய சீடர்களுக்கு தாம் ஊழியம் செய்கிறவராக (வேலைக்காரனாக) இருப்பதாக இயேசு சொன்னார். தன் தெய்வீகத்தன்மையின் மேன்மையை அவர் வெளிப்படுத்தாமல், தம்மைத் தாழ்த்திக் கொண்டார், இதனை லூக்கா 22:27ல் காணலாம்.

பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன். (லூக்கா 22:27)

இந்த சத்தியத்தை அவர் இன்னும் தெளிவாக இன்னொரு முறை நடைமுறையில் செய்து காட்டினார், அதாவது இயேசு சீடர்களின்  கால்களை கழுவும் போது இதனை செய்து காட்டினார் (யோவான் 13:5). அழுக்கு இல்லாத சுத்தமான கால்கள் தான் பரிசுத்தத்திற்கு அடையாளம் என்பதால் அவர் சீடர்களின் கால்களை கழுவவில்லை. அதற்கு பதிலாக, தாம் ஆண்டவராக இருந்தாலும், எல்லா வித கனத்திற்கு பாத்திரராக இருந்தாலும், ஒரு பணிவிடைக்காரனின் நிலையை தரித்துக் கொண்டு தம்மை விட தாழ்வானவர்களுக்கு (மனிதர்களுக்கு) ஊழியம் செய்தார் என்பதை வெளிப்படுத்தவே இப்படி செய்தார். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், இதே போல தம்முடைய சீடர்களும், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்பதை வெளிப்படுத்தினார் (யோவான் 13:15).

இஸ்லாமிலே முஹம்மதுவிற்கு தனிப்பட்ட சிறப்பு சலுகைகள், மதிப்பு மரியாதை தரப்படவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டார். கிறிஸ்தவத்திலே, இயேசு மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே வந்திருக்கிறார் என்று எடுத்துரைத்தார், அதனை செயலிலும் செய்துக் காட்டினார். இவ்விருவருடைய இச்செயல்களில் உங்களுக்கு ஏதாவது துப்பு தெரிகின்றதா? யார் உண்மை தெய்வத்தை வெளிப்படுத்த வந்தவர்கள் என்று உங்களால் கணிக்கமுடிகின்றதா?

குறிப்பு: குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=481

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்