ரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)

முன்னுரை:

உமரின் தம்பி சௌதி அரேபியாவில் மூன்று வருடங்களாக வேலை செய்கிறார். ஒரு நாள் திடீரென்று 'தான் இஸ்லாமியராக மாறிவிட்டதாக' ஒரு மெயில் அனுப்பினார். அதன் பின்பு குடும்பத்தோடு தொலைபேசியில் பேசுவதையும் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வருகிறார். உமர் இந்த ரமளான் மாதத்தில் தன் தம்பிக்கு கடிதங்கள் எழுத முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு கடிதத்தை எழுதி தன் தம்பிக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்.

ரமளான் நாள் 1 – நோன்பு

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

இந்த வருடம் என்னோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவாய் என்று நினைத்தேன், ஆனால், நீ ரமளான் பண்டிகையை கொண்டாடப்போகிறாய்.  இந்த வருடம் டிசம்பர் மாதம் ஊருக்கு வருவாய் என்று நாங்கள் எல்லாரும் காத்திருக்கிறோம். ஆனால், நீயோ இன்னும் இரண்டு வருடங்கள் ஊருக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாய். உனக்குள் ஏற்பட்ட மாற்றம் பற்றி சிறிது அறிந்துக் கொள்ளலாம் என்றும், நீ இஸ்லாம் பற்றி முழுவதும் அறிந்த பிறகு தான் அதனை தழுவினாய் என்பதை அறிந்துக் கொள்ளவும் என்றும் இந்த கடிதங்களை எழுதுகிறேன்.

நானும் நீயும் ஒன்றாக சேர்ந்து வேதம் வாசித்தோம், ஜெபித்தோம், அனேக விஷயங்களை தியானித்தோம், எனவே உனக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவு "அண்ணன் தம்பி" என்ற முறையில் இருந்தாலும், நாம் அதையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இதன் அடிப்படையில் இந்த ரமளான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய கடிதத்தை உனக்கு எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். இவைகளை நீ படித்து எனக்கு பதில் எழுதுவாய் என்று நம்புகிறேன். இந்த கடிதத்தை கண்டவுடன் நீ இதனை கிழித்துப்போடவேண்டாம், ஏனென்றால், இது உன் நித்தியத்தைப் பற்றிய விஷயமாகும். நீ எடுக்கும் முடிவுகளில் அதிமுக்கியமான முடிவு, உன் நித்தியம்  பற்றிய முடிவாகும். உன்னுடைய வெற்றி இந்த அண்ணனின் வெற்றியாகும், உன்னுடைய தோல்வி இந்த அண்ணனின் தோல்வியாகும்.

இன்று ரமளான் முதல் நோன்பு ஆரம்பமாகியுள்ளது, நீயும் நோன்பு இருக்கிறாய் என்று நம்புகிறேன்.

நாம் இருவரும் அனேக முறை உபவாசம் இருந்துள்ளோம், அந்நாட்களில் அதிகமாக பல விஷயங்களுக்காக ஜெபித்துள்ளோம். உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நான் என் முகத்தை மிகவும் வாடலாக வைத்திருந்த போது என்னை நீ கண்டித்தாய், முகத்தை உற்சாகமாக வைத்திருக்கவேண்டும், மற்றவர்களுக்கு நாம் உபவாசம் இருப்பது தெரியக்கூடாது என்று கூறினாய், அந்தரங்கத்தில் தேவனுக்கு காணப்படவேண்டிய உபவாசத்தை மக்களின் முன்பாக மறந்தும் கூட காட்டக்கூடாது என்று கடிந்துக்கொண்டாய்.   ஆனால், இன்று நீ உபவாசம் இருக்கிறாய், எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையாக எல்லா சடங்காச்சாரங்களையும் செய்கிறாய், இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த 'பல தெய்வ வழிப்பாட்டு மக்கள்' பின்பற்றின "30 நாட்கள் நோன்பு" என்ற சடங்காச்சாரத்தை இன்று நீ பின்பற்றுகிறாய்.  இஸ்லாமிய நோன்பு என்பது 'பல தெய்வங்களை வணங்கும் மக்களின்' மதச்சடங்கு என்று உனக்குத் தெரியுமா? மேலும் இஸ்லாமில் காணப்படும் அனேக சடங்காச்சாரங்களாகிய தொழுகை செய்வதிலிருந்து, மக்காவிற்கு ஹஜ் செய்யும் வரையுள்ள பெரும்பான்மையான சடங்குகள் பழங்குடி மக்கள் பின்பற்றியவைகள் என்று உனக்கு தெரியுமா?

அன்று தேவனுக்கு மட்டும் தெரிந்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்தரங்கத்தில் உன் பக்தியை காண்பித்த நீ, இன்று எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்கிறாய். இதைப் பற்றி நீ சிந்தித்து பார்த்ததுண்டா? கதவு மூடப்பட்ட ஒரு அறைக்குள்ளே உன் பிதாவை நோக்கி அந்தரங்கத்தில் வேண்டுதல் செய் என்ற கட்டளைக்கு எதிராக உலக மக்கள் காணும்படியாக வெளிப்படையாக நீ தொழுதுக்கொள்கிறாய்.

மெய்யான தேவனாகிய யெகோவா தான் 'அல்லாஹ்' என்று நீ சொல்கிறாய், ஆனால், அந்த பைபிளின் மெய் தேவன் விதித்த கட்டளைகளை நீ மறந்துபோனாய்? அந்நிய தெய்வங்களையும், அவர்களின் பாரம்பரியங்களையும் பின்பற்றாதீர்கள் என்று அவர் கட்டளையிட்டு இருக்கும் போது, நீ இஸ்லாமிய போர்வையில், அந்நிய தெய்வத்தை பின் பற்றிக்கொண்டு இருக்கிறாய். 

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம் (உபாகமம் 18:9) .

நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவியராகமம் 18:3-4).

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத்தேயு 6:16-18).

தம்பி, நீ எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து முடிவு எடுப்பவன் என்று எனக்குத் தெரியும், ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் நீ சரியாக இஸ்லாமை சோதிக்காமல் முடிவு எடுத்துள்ளாய் என்பதை உனக்கு சொல்லிக்கொள்கிறேன். நம்முடைய இந்த கடிதத்தொடர்பு நம் இருவருக்கும் உபயோகமாக இருக்கும். உன்னுடைய புதிய மார்க்கம் பற்றி நீ அறிந்துக்கொண்டவைகளை என்னோடு பகிர்ந்துக்கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பாகும். எனவே, இதனை நீ நல் முறையில் பயன்படுத்திக்கொள்வாய் என்று நம்புகிறேன்.

இந்த கடிதத்தை படித்த பிறகு எனக்கு நீ பதில் எழுதுவாய் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

கிறிஸ்துவிற்குள் உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்