இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை அறிய உதவும் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 - குர்‍ஆன் பாகம் 2

(2020 ரமளான் தொடர் கட்டுரைகள்)

முந்தைய பாகத்தில் இந்த தொடர் கட்டுரையின் நோக்கத்தையும், குர்‍ஆன் பற்றி 30 சின்னஞ்சிறு கேள்வி பதில்களையும் கண்டோம். இந்த இரண்டாம் பாகத்தில் குர்‍ஆன் பற்றிய இன்னும் 30 கேள்வி பதில்களைக் காண்போம்.

பாகம் 2  - குர்‍ஆன் கேள்விகள் பதில்கள் 31 - 60 வரை

கேள்வி 31: புதிய ஏற்பாட்டிற்கும் குர்‍ஆனுக்கும் இடையே எத்தனை ஆண்டுகள் இடைவெளி உள்ளது?

பதில் 31:  பைபிளின் புதிய ஏற்பாடு, கி.பி. 100க்குள் முடிவடைந்துவிட்டது, மற்றும் குர்‍ஆனின் முதல் வெளிப்பாடு முஹம்மது அவர்களுக்கு கி.பி. 610ம் ஆண்டு வந்தது. இதன் படி கணக்கிட்டால், புதிய ஏற்பாட்டின் கடைசி வசனத்திற்கும், குர்‍ஆனின் முதல் வசனத்திற்கும் இடையே 510 ஆண்டுகள் இடைவெளி உள்ளது என்று கூறலாம்.

இன்னொரு கோணத்தில்  கணக்கிடவேண்டுமென்றால், முஹம்மதுவிற்கு கடைசி குர்‍ஆன் வசனம் கி.பி 632ம் ஆண்டு வெளிப்பட்டது(இந்த ஆண்டு அவர் மரித்தார்). ஆக, புதிய ஏற்பாட்டிற்கும் குர்‍ஆனின் அனைத்து  வசனங்களும் முடிவடைவதற்கும் இடையே 532 ஆண்டுகள் இடைவெளி உள்ளது எனலாம்.

சுருக்கமாக, ஒருவரில் கூறுவதென்றால் பைபிளுக்கும் குர்‍ஆனுக்கும் 500 ஆண்டுகள் இடைவெளி என்றுச் சொல்லலாம்.

கேள்வி 32: பைபிளில் வரும்  நபர்களின் பெயர்கள் குர்‍ஆனில் வேறு வகையாக உச்சரிக்கப்படுகிறது என்கிறார்களே, ஒரு பட்டியலைத் தரமுடியுமா?

பதில் 32: ஒரு மொழியில் உள்ள பெயர்களை வேறு மொழியில் மொழியாக்கம் செய்யும் போது, பெரும்பான்மையாக உச்சரிப்பு மாறுபடும். பைபிளின் நிகழ்ச்சிகளை குர்‍ஆன் மறுபதிவு செய்யும் போது, பெயர்களின் உச்சரிப்பு  மாறியுள்ளது, இந்த பட்டியலைப் பாருங்கள்.

நாம் தமிழ் பைபிளை கணக்கில் கொண்டுள்ளோம்.  சில பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பைபிளில் உச்சரிப்பு  - குர்‍ஆனில் உச்சரிப்பு

  1. ஆதாம்  - ஆதம்
  2. நோவா  - நூஹ் 
  3. ஏனோக்கு  - இத்ரீஸ் 
  4. ஆபிரகாம்  - இப்ராஹீம் 
  5. இஸ்மவேல்  - இஸ்மாயீல் 
  6. ஈசாக்கு  - இஸ்ஹாக் 
  7. யாக்கோபு - யஃகூப் 
  8. யோசேப்பு  - யூஸுஃப் 
  9. லோத்து  - லூத் 
  10. எத்திரோ - ஷுஐப்  (மோசேயின் மாமனார் என்று அறியப்படுகின்றது)
  11. மோசே  - மூஸா 
  12. ஆரோன்  - ஹாரூன் 
  13. தாவீது - தாவூத் 
  14. சாலொமோன்  - ஸுலைமான்
  15. யோபு  - அய்யூப் 
  16. யோனா  - யூனுஸ்
  17. எலியா  - இல்யாஸ் 
  18. எலிசா  - அல்யஸவு
  19. சகரியா  - ஜகரிய்யா
  20. யோவான்  - யஹ்யா

கேள்வி  33: முஹம்மதுவிற்கு விருத்தசேதனம்  (சுன்னத்து) செய்ததாக ஏதாவது குறிப்பு குர்‍ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ உள்ளதா?

பதில் 33: இல்லை, இவ்விரண்டிலும் முஹம்மதுவிற்கு விருத்தசேதனம் செய்ததாக குறிப்பு இல்லை.

கேள்வி 34: நான் ஒரு தமிழ் குர்‍ஆனை வாக்கியுள்ளேன். அதனை படித்து இஸ்லாமை புரிந்துக்கொள்ள எத்தனை நாட்கள் தேவைப்படும்?

பதில் 34: குர்‍ஆனில் 6236 வசனங்கள் உள்ளன, தினம் ஒரு மணிநேரம் ஒதுக்கினாலும், ஒரு மாதத்திற்குள்  படித்துவிடலாம். ஆனால், புரிந்துக்கொள்வதற்கு வெறும் குர்‍ஆனை மட்டுமே படித்தால் போதாது, அதற்கு நீங்கள் ஹதீஸ்களையும், குர்‍ஆன் தஃப்ஸீர்களையும் (விளக்கவுரைகளையும்) படிக்கவேண்டும். இதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள்  ஆகலாம், அதுவும் உங்களின் விருப்பத்தையும், நேரத்தையும் பொறுத்தது.

கேள்வி 35: அல்லாஹ் முஹம்மதுவிற்கு முதன் முதலாக இறக்கியதாகச் சொல்லப்படும்  குர்‍ஆன் வசனங்கள் எவை?

பதில் 35: கி.பி. 610ம் ஆண்டு முஹம்மதுவிற்கு ஹிரா குகையில், இன்று குர்‍ஆன் 96ம் அத்தியாயத்தில் உள்ள ஐந்து வசனங்கள் இறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

அவை:

  • 96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
  • 96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
  • 96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
  • 96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்
  • 96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

கேள்வி 36: குர்‍ஆனில் சில அத்தியாயங்களின் முதல் வசனத்தில் வார்த்தைகள் இல்லாமல், வெறும் சம்மந்தமில்லா எழுத்துக்கள் மட்டுமே உள்ளனவே, அவைகளுக்கு பொருள் உள்ளதா?

பதில் 36: குர்‍ஆனில் 29 அத்தியாயங்களில் பொருள் கொள்ளமுடியாத எழுத்துக்கள் முதல் வசனமாகவோ அல்லது வசனத்தின் ஒரு பகுதியாகவோ வரும். அவைகளின் பொருளை யாரும் அறியார்கள். சில முஸ்லிம் அறிஞர்கள் சில அர்த்தங்களை கொடுப்பார்கள், ஆனால் அவைகளெல்லாம் வெறும் யூகங்கள் தான் உண்மையில்லை.

இந்த 29 அத்தியாயங்கள் இவைகள்: 2–3, 7, 10–15, 19–20, 26–32, 36, 38, 40–46, 50 and 68

உதாரணம்:

  • குர்‍ஆன் 2:1. அலிஃப், லாம், மீம்.
  • குர்‍ஆன் 3:1. அலிஃப், லாம், மீம்.
  • குர்‍ஆன் 7:1. அலிஃப், லாம், மீம், ஸாத்.

கேள்வி 37: மஸீஹ் என்ற வார்த்தையின் பொருளை குர்‍ஆன் விளக்குகின்றதா?

பதில் 37: இல்லை, குர்‍ஆன் மஸீஹ் என்ற வார்த்தையின் பொருளை விளக்குவதில்லை. இந்த வார்த்தை மேசியா(மஷியக்) என்ற எபிரேய வார்த்தையாகும். கிரேக்க மொழியில் இவ்வார்த்தை 'கிறிஸ்தோஸ்' என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். இதற்கு தமிழில் "அபிஷேகம் செய்யப்பட்டவர்" என்று பொருள். குர்‍ஆன் இதனை பல முறை இயேசுவிற்கு பயன்படுத்தியுள்ளதே தவிர, இதன் பொருளை அது விளக்கவில்லை.

கேள்வி 38: குர்‍ஆனில் ஒருவரின் பெயர் அவரது தாயின் பெயரோடு பயன்படுத்தப்பட்டுள்ளது? அவர் யார்?

பதில் 38: இயேசுக் கிறிஸ்துவை குறிப்பிடும் போது "மரியமின் மகன் இயேசுக் கிறிஸ்து" என்று குர்‍ஆன் குறிப்பிடுகின்றது.

பார்க்க: குர்‍ஆன் 3:45

3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

கேள்வி 39: மகா அலேக்சாண்டர் (Alexander the Great) பற்றி குர்‍ஆனில் வசனங்கள் உண்டு என்றுச் சொல்கிறார்கள்! இது உண்மையா?

பதில் 39: குர்‍ஆனில் துல்கர்னைன் என்ற பெயரில் ஒரு அரசன் பற்றி அல்லாஹ் சொல்கின்றான். அவனைப் பற்றிய சரித்திர விவரங்களை ஆய்வு செய்யும் போது, மகா அலேக்சாண்டருக்கு அருகாமையில் வருவதாக சில  அறிஞர்கள் காண்கிறார்கள். ஆரம்பத்தில் முஸ்லிம் அறிஞர்கள், துல்கர்னைன் என்று குர்‍ஆன் சொல்வது அலேக்சாண்டரைத் தான் என்றுச்  சொன்னார்கள். ஆனால், உண்மையில் அவர் ஒரு பல தெய்வ பழிப்பாட்டு நபராக இருந்தார் என்பதைக் கண்டு, துல்கர்னைன் அலேக்சாண்டர் அல்ல என்று சொல்கிறார்கள். குர்‍ஆனில் வரும் துல்கர்னைன் அல்லாஹ்வை தொழும் நபராக காட்டப்படுவதால், இந்த நிலைப்பாட்டிற்கு முஸ்லிம் அறிஞர்கள் தள்ளப்படுகிறார்கள்.

உண்மையில் இவர் மகா அலேக்சாண்டர் இல்லையென்றால், உலக சரித்திரத்தில் இந்த துல்கர்னைன் யார்? குர்‍ஆன் சொல்லும் துல்கர்னைன் ஒரு கற்பனைக் கதா பாத்திரமா? என்ற கேள்விகளுக்கு முஸ்லிம்களிடம் சரியான பதில் இல்லை.

பார்க்க: குர்‍ஆன் 18:83-98

குர்‍ஆன் 18:83 (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக

கேள்வி 40: இரத்து (Arabic: Naskh, English: Abrogation) செய்வது என்றால் என்ன? 

பதில் 40: இஸ்லாமில் இரத்து செய்வது என்றால், "குர்‍ஆனின் ஒரு வசனத்தை அல்லது வசனங்களை, வேறு வசனங்களைக் கொண்டு இரத்து செய்துவிடுவதாகும்". அல்லாஹ் குர்‍ஆனில் ஒரு சட்டத்தைப்போடுவான், சில  நாட்கள் கழித்து முந்தைய சட்டத்தை நீக்கி, வேறு வசனங்களைக் கொண்டு வேறு சட்டத்தைக் கொடுப்பான்.

பார்க்க: குர்‍ஆன் 2:106 மற்றும் 16.101

2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

16:101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

இது அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் ஒரு சங்கடத்தை கொடுத்துள்ளது. இதனை 16:101ல் காணலாம். மனிதன் போடும் சட்டம் மாறலாம், ஆனால் இறைவன் போடும் சட்டம் அடிக்கடி மாற்றமடைந்தால் அவனின் ஞானம் மீது மக்களுக்கு சந்தேகம் வருகிறது.

கேள்வி 41: குர்‍ஆனின் வசனங்களை குர்‍ஆனே இரத்து செய்யுமா?

பதில் 41: ஆமாம், குர்‍ஆனின் வசனங்களை அல்லாஹ்வே இரத்து செய்கின்றான். உதாரணத்திற்கு, ஸுயுதி என்ற இஸ்லாமிய அறிஞரின் இரத்து செய்யப்பட்ட வசனங்களின் (21) பட்டியலை பார்க்கவும்.

கேள்வி 42: ஒரே ஒரு மணி நேரத்தில் ஒரு குர்‍ஆன் வசனம் இரத்து செய்யப்பட்டது என்பது உண்மையா?

பதில் 42: ஆமாம், குர்‍ஆன் 58:12ம் வசனத்தை அல்லாஹ் இறக்கி, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதனை 58:13ம் வசனத்தைக் கொண்டு அல்லாஹ் இரத்து செய்துள்ளான்.

இதன் பின்னணியை அறிய படிக்கவும்:

கேள்வி 43: குர்‍ஆனை பைபிளோடு ஒப்பிடும் போது, வசனங்களின் எண்ணிக்கையில் குர்‍ஆன் பெரியதா? சிறியதா?

பதில் 43:  ஆமாம், வசனங்களின் எண்ணிக்கையில் பைபிளோடு ஒப்பிடும் போது குர்‍ஆன் 20% அளவுடையது.

குர்‍ஆன் வசனங்களின் எண்ணிக்கை = 6236

பைபிள் வசனங்களின்  எண்ணிக்கை = 31102

இதைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

குர்-ஆன் பைபிளைவிட அளவில் சிறியதா? (அ) பெரியதா?

கேள்வி 44: அரபி மொழி செமிட்டிக் மொழியா?

பதில் 44: ஆமாம், அரபி ஒரு செமிட்டிக் மொழி குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதே போல எபிரேயம் மற்றும் அராமிக் மொழிகளும் செமிட்டிக் மொழிகளாகும்(Semitic languages).

கேள்வி 45: இஸ்லாமிய ஆட்சியாளராகிய மூன்றாவது கலீஃபா உஸ்மான் ஏன் குர்‍ஆனை எரித்தார்?

பதில் 45: முஹம்மதுவின் மரணத்திற்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு உஸ்மான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்போது குர்‍ஆனை மக்கள் வித்தியாசமாக ஓதிக்கொண்டு இருந்தார்கள். எனவே, இவர் ஒரு புத்தகமாக குர்‍ஆனை தொகுத்தார், புழக்கத்தில் இருந்த மற்ற குர்‍ஆன்களை (கையெழுத்துப் பிரதிகளை) இவர் எரித்துவிட்டார்.  ஆகையால், குர்‍ஆன்களை முதன் முதலில் எரித்த நிகழ்ச்சி, முஹம்மதுவின் சஹாபாக்களால் நடந்தேறியது.

கேள்வி 46: குர்‍ஆனை ஒரு புத்தகமாக தொகுக்கும் போது, அல்லாஹ் கொடுத்த பல வசனங்கள் கைவிடப்பட்டது என்ற கூற்று சரியா?

பதில் 46: ஆம், உஸ்மான் குர்‍ஆனை தொகுக்கும் போது பல வசனங்கள் குர்‍ஆனில் சேர்க்கப்படவில்லை, இதற்கு ஹதீஸ்களும், ஸுயூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் நூல்களும் சான்றுகளாக உள்ளன, அடுத்த கேள்வியை படிக்கவும்.

கேள்வி 47: இப்னு மஸூத் என்ற முஹம்மதுவின் தோழர் தன் குர்‍ஆன் பிரதியை எரிக்க ஏன் அனுமதிக்க மறுத்தார்?

பதில் 47: முஹம்மதுவினால் குர்‍ஆனை கற்றுக்கொடுக்க நியமிக்கப்பட்டவர்களில் மஸூத் முக்கியமானவராக இருந்தார். தம்மிடம் உள்ள குர்‍ஆன் பிரதி தான் உண்மையான குர்‍ஆன் என்று இவர் நம்பினார், மேலும், குர்‍ஆனை தொகுத்தவர்களின் பிரதிகளில் தவறுகள் இருப்பதாக இவர் நம்பியபடியினால் தன் பிரதியை எரிக்க இவர் ஒப்புக்கொள்ளவில்லை.

குர்‍ஆன் பற்றி தனக்கு இருக்கும் ஞானம் பற்றி அவர் கூறியது, சஹீஹ் முஸ்லீம் நூல், எண் 4860ல் பதிவு செய்யப்பட்டுள்ளது:

சஹீஹ் முஸ்லீம் எண் 4860. ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்" (3:161) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி விட்டு, "யாருடைய ஓதல் முறைப்படி நான் ஓத வேண்டுமெனக் கூறுகிறீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களிலேயே நான்தான் இறைவேதத்தை நன்கு கற்றவன் என்பதை அறிந்துள்ளார்கள். என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும் சரி) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்" என்று கூறினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.

இதைப்பற்றிய ஆய்வுகளை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

கேள்வி 48: குர்‍ஆன் எழுதப்பட்ட காலத்தில் இருந்த அரபி எழுத்துக்களில் உயிரெழுத்து இல்லையென்பது சரியான கூற்றா?

பதில் 48: ஆம், அக்கால அரபி எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் இல்லை. கி.பி. 786 காலக்கட்டத்தில், உயிரெழுத்துக்கள் சேர்க்கப்பட்டன.

கேள்வி 49: இஸ்லாமிய விசுவாச அறிக்கையாகிய 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்' இந்த வாக்கியம் எந்த குர்‍ஆன் வசனத்தில் உள்ளது?

பதில் 49: இந்த வாக்கியம் எந்த ஒரு குர்‍ஆன் வசனத்திலும் இல்லை.

கேள்வி 50: இஸ்லாமிய  விசுவாச அறிக்கையை (ஷஹதா) குர்‍ஆனில் இல்லையென்றால், அதை ஏன் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்? 

பதில் 50: இஸ்லாமிய ஷஹதா எந்த ஒரு குர்‍ஆன் வசனத்திலும் முழுவதுமாக இல்லை. அது கீழ்கண்ட மூன்று வசனங்களில் வரும், சில வார்த்தைகளின் கூட்டுச் சொற்றொடர் தான் “ஷஹதா”. 

குர்‍ஆன் 63:1; 10:90; 5:73; 3:62

கேள்வி 51: குர்‍ஆன் தமிழாக்கங்களில் (இதர மொழியாக்கங்களிலும்) ஏன் பல வார்த்தைகளை அடைப்பிற்குள் எழுதுகிறார்கள்?

பதில் 51: அரபி மொழியிலிருந்து குர்‍ஆனை மொழியாக்கம் செய்யும் போது, வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கம் செய்தால், சில இடங்களில் பொருள் வராது, எனவே அடைப்பிற்குள் சில வார்த்தைகளை தமிழாக்கம் செய்பவர்கள் சொந்தமாக எழுதி, வசனத்திற்கு பொருள் வரும்படி செய்கிறார்கள்.

சிலவேளைகளில் தங்கள் சொந்த கருத்தையும் அடைப்பிற்குள் போட்டு தமிழாக்கம் செய்துவிடுகிறார்கள்.

கேள்வி 52: அல்லாவிற்கு 99 பெயர்கள் உள்ளன என்று குர்‍ஆன் சொல்கிறதா? 

பதில் 52: இல்லை. ஹதீஸ்கள் தான் சொல்கின்றன. அல்லாஹ்விற்கு அனேக அழகிய பெயர்கள் உள்ளன என்று மட்டும் தான் குர்‍ஆன் சொல்கின்றது. ஆனால், அவைகள் 99 என்று ஹதீஸ்களில் வருகிறது, மேலும் ஒவ்வொரு அறிஞரும் வெவ்வேறு பட்டியலைத் தருகிறார்கள்.

பார்க்க குர்‍ஆன் 17:110:

17:110. “நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; . . .

கேள்வி 53: குர்‍ஆனில் அல்லாஹ்வின் 99 பெயர்களில் வெறும் 81 பெயர்கள் மட்டுமே உள்ளன என்றுச் சொல்கிறார்களே, இது உண்மையா?

பதில் 53: அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளன என்று ஹதீஸ்கள் சொன்னாலும், அவைகள் அனைத்தும் குர்‍ஆனில் காணப்படாது. அல்லாஹ்வின் ஒவ்வொரு குணத்தையும் ஒரு பெயராக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஒரு இஸ்லாமிய தளத்தில், அல்லாஹ்வின் 81 பெயர்கள் மட்டும் தான் குர்‍ஆனில் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். பார்க்க:Names of Allah mentioned in the Quran

கேள்வி 54: ஹூருல் ஈன் என்பவர்கள் யார்?

பதில் 54: கீழ்கண்ட நான்கு குர்‍ஆன் வசனங்களையும், அவைகளைச் சுற்றியுள்ள வசனங்களையும் படித்தால், ஹூருல் ஈன்கள் என்பர்கள், முஸ்லிம் ஆண்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் கொடுக்கும் பெண்களாகும்/மனைவிகளாகும். இவர்கள் பற்றி முஹம்மது கூறியவற்றை புகாரி ஹதீஸ்களிலும் காணுங்கள். கவனிக்கவும், இவர்கள் உலகத்தில் திருமணமாகியிருந்த மனைவிகள் அல்ல, அவர்கள் வெறு இவர்கள் வேறு.

குர்‍ஆன்  44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

குர்‍ஆன்  52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

குர்‍ஆன்  56:22. (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.

குர்‍ஆன்  56:35. நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;

ஸஹீஹ் புகாரி எண் 2799

2796. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.  என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி எண் 3254.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும். 

கேள்வி 55: குர்‍ஆன் 47:19ஐ விளக்கமுடியுமா? இதில் அல்லாஹ் என்ன சொல்லவருகின்றான்?

பதில் 55: குர்‍ஆன் 47:19ம் வசனத்தின் முக்கியமான பகுதியை நான்கு தமிழாக்கங்களில் தருகிறேன். இந்த வசனத்தின் மூலம் அறிவது என்னவென்றால், உலக மக்களைப்போன்று, முஹம்மதுவும் பாவங்கள்/தவறுகள்/பிழைகள் செய்கின்ற ஒரு மனிதரே என்பதாகும். இது குர்‍ஆனின் சாட்சியாகும்.

47:19. . . .; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - . . .

47:19. . . . நீங்கள் உங்களுடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்பு கோருங்கள்! (நம்பிக்கையாளர்களே!) . . .

47:19. . . . மேலும், உம் பிழைகளுக்காகவும் இறைநம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்களுக்காகவும் மன்னிப்புக் கேளும்!. . .

47:19. . . . உம்முடைய பாவத்திற்காகவும், விசுவாசங்கொண்ட ஆண்களுக்காகவும், விசுவாசங்கொண்ட பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக! . . .

மூலம்: http://www.tamililquran.com/

கேள்வி 56: முஹம்மது பாவமே செய்யாதவர் என்று சொல்கிறார்களே, இது உண்மையா?

பதில் 56: முந்தைய கேள்வியின் பதிலைப் பார்க்கவும். குர்‍ஆன் 47:19ன் படி முஹம்மது நம்மைப்போன்று பாவங்கள் செய்கின்றவரே ஆவார். அவருக்கும் அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு தேவையாக இருக்கிறது. இதனை மறுப்பவர் குர்‍ஆனையும், அல்லாஹ்வையும் மறுப்பவராவார். யாராவது முஹம்மதுவிற்கு அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு தேவைப்படாது என்று சொல்வாரானால், அவர் அல்லாஹ்விற்கு சமமாக முஹம்மதுவை வைக்கின்றார் என்று பொருள்.

குர்‍ஆன் 40:55ஐயும் பார்க்கவும்:

குர்‍ஆன் 40:55. ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!

இதைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட ஆய்வுக் கட்டுரைகளை படிக்கவும்:

கேள்வி 57: எல்லா நபிமார்களும் பாவம் செய்யாதவர்கள் என்று தான் குர்‍ஆன் சொல்கிறதே!

பதில்  57: குர்‍ஆனில் எந்த வசனத்தில் 'நபிமார்கள் அனைவரும் பாவமில்லாதவர்கள்' என்று சொல்லியுள்ளது? ஒரே ஒரு வசனத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம்!? நேரடியாக வேண்டாம் மறைமுகமாகவாவது குர்‍ஆன் சொல்வதில்லை. 

உங்கள் இமாம் அல்லது அறிஞர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள். குர்‍ஆன் இப்படி சொல்வதில்லை, ஆனால், இதற்கு பதிலாக, முஹம்மதுவின் பாவங்கள்(47:19, 40:55) பற்றி குர்‍ஆன் பேசுவது போன்று, நபிகளின் பாவங்களை குர்‍ஆன் சிட்டிக்காட்டுகின்றது. 

கேள்வி 58: மற்ற நபிமார்கள் பாவம் செய்தார்கள் என்று குர்‍ஆன் எங்கே சொல்கிறது?

பதில் 58: முஹம்மதுவே பாவம் செய்தவர் என்று குர்‍ஆன் 47:19, 40:55 கூறும் போது, மற்ற நபிமார்கள் பாவம் செய்திருக்கமாட்டார்கள் என்று குர்‍ஆன் சொல்லும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்களா? சரி, உங்கள் திருப்திக்காக 2 உதாரணங்களைத் தருகிறேன்.

யூஸுஃப் பாவம் செய்பவர் தான், என்னால் தப்பித்தார் என்று அல்லாஹ் கூறுகின்றான்:

குர்‍ஆன் 12:24. ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

தாவூத் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரினார்:

குர்‍ஆன் 38:24. (அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.

கேள்வி 59: குர்‍ஆனில் வசனங்கள் எழுத்துக்கு எழுத்து மாறாமல் உள்ளது என்பது உண்மையா?

பதில் 59: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. குர்‍ஆனில் அனேக வசனங்களே தொலைந்துவுள்ளது. அனேக வசனங்களில் எழுத்துப் பிழைகளும் உள்ளது. இஸ்லாமிய அறிஞர் ஸுயூதி தம்முடைய இத்கான் புத்தகத்தில் இதைப் பற்றி என்ன எழுதியுள்ளார் என்பதை கீழ்கண்ட கட்டுரையில்  படிக்கவும். குர்‍ஆன் பற்றி பொய்களைச் சொல்லும் இன்றைய முஸ்லிம் அறிஞர்களிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.

கேள்வி 60: குர்‍ஆனில் ஏதாவது ஒரு இடத்தில் இயேசு (ஈஸா) பாவம் செய்தார் என்று நேரடியாகவோ மறைமுகமாவோ சொல்லப்பட்டுள்ளதா?

பதில் 60: முஹம்மதுவைப் பார்த்து அல்லாஹ் 'உம் பாவங்களுக்காக மன்னிப்பு கோரும்' என்று சொன்னான். மேலும் 'மற்ற நபிமார்கள் பாவமன்னிப்பு கோரினார்கள்' என்றும் சொன்னான், ஆனால் ஒரு இடத்திலும் இயேசு பற்றி குர்‍ஆன் இப்படி சொல்வதில்லை.

குர்‍ஆனோ ஹதீஸ்களோ இயேசு பாவமற்றவர் என்று தான் சொல்கின்றது.

குர்‍ஆன் 19:19. “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார். 

புகாரி ஹதீஸிலும், ஆதாம் தொடங்கி அனைவரும் தம் பாவங்களை அறிக்கையிட்டார்களாம், ஆனால் இயேசு ஒரு பாவத்தையும் அறிக்கையிடவில்லையாம். இது எதைக் காட்டுகின்றது? இயேசு பாவமற்றவர் என்பதைக் காட்டுகின்றது:

4712. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

. . . அதற்கு ஈசா(அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை - (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் - . . .

இந்த இரண்டாம் பாகத்தை இதோடு முடித்துக்கொள்வோம். 

குர்‍ஆனிலிருந்து இரண்டு பாகங்கள் (60 கேள்வி பதில்களை)க் கண்டோம், மூன்றாம் பாகத்தில் இன்னொரு தலைப்பில் 30 கேள்வி பதில்களைக் காண்போம்.

வாசகர்களுக்கு ஏதாவது கேள்விகள் தோன்றினால், எனக்கு எழுதவும் அவைகளுக்கும் பதில்கள் கொடுக்க முயலுவேன்.


2020 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்