கொரொனாவும் கிறிஸ்தவர்களும் - கேள்வி பதில்கள் - 1

கொரொனா கொள்ளை நோயும் கிறிஸ்தவர்களும் என்ற தலைப்பில் சில அடிப்படை விஷயங்களை என் முந்தைய கட்டுரையில் பகிர்ந்து கொண்டேன். அந்தக் கட்டுரையை இங்கு படிக்கலாம்.

காட்டுத்தீ போன்று கொரொனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் பொதுவாக கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை இந்த கட்டுரையில் கொடுக்கலாம் என்று விரும்புகிறேன்.

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்:

  1. ஊரடங்கு சட்டத்தினால் சபையில் ஆராதனை செய்யாமல், வீடுகளில் செய்வது சரியா?
  2. குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சபையில் ஆராதனை செய்ய  அரசு  அனுமதிக்கக்கூடாதா? 
  3. எங்களை தேவாலயங்களில் தொழுதுக்கொள்ள‌ விடுங்கள், ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்கினால்  எங்களுக்குத் தானே வரும், உங்களுக்கு என்ன பிரச்சனை?
  4. ஆன்லைன் மூலமாக ஆராதனை செய்வது சரியா? அல்லது குடும்பமாக நாமே ஆராதனை செய்வது சரியா?
  5. கர்த்தரின் பந்தி (இராபோஜனம்) வீட்டிலேயே நாமே செய்யக்கூடாதா? இப்படி செய்வது தவறு என்று சிலர் கூறுகிறார்களே!

1) ஊரடங்கு சட்டத்தினால் சபையில் ஆராதனை செய்யாமல், வீடுகளில் செய்வது சரியா?

ஒருவர் கிறிஸ்துவை பின்பற்றும் போது அவருடைய ஆன்மீக வாழ்வு மற்றும் உலகப்பிரகாரமான வாழ்வுக்கு சில காரியங்களை அவர் செய்ய வேண்டும். அனுதினமும் வேதம் வாசித்து புரிந்துகொண்டு அதற்கு கீழ்படிதல்,  மற்றும் அனுதினமும் தேவனோடு பேசுதல் அதாவது ஜெபம் செய்தல். மூன்றாவதாக, தன்னைப்போலவே நம்பிக்கையுள்ள ஒரு நல்ல ஐக்கியத்தில்(திருச்சபையில்) சேர்ந்து தேவனை ஆராதனை  செய்வது. 

தற்போதைய ஊரடங்கு சட்டத்தின் காலத்தில்  முதல் இரண்டு கடமைகளை வீட்டில் இருந்து கொண்டே செய்யலாம், இதற்கு முன்பும் அப்படித்தான் செய்துகொண்டிருந்தோம், அதே போல இப்போதும் வீட்டில் இருந்து கொண்டு வேதம் வாசிக்கலாம், தியானிக்கலாம் மற்றும் ஜெபம் செய்துகொள்ளலாம்.

ஆனால் மூன்றாவதாக சொல்லப்பட்ட கடமையாகிய ஐக்கியமாக சேர்ந்து தேவனை ஆராதிப்பது தற்கால சூழ்நிலையில் சாத்தியமில்லாத ஒன்று. இதற்கு நியாயமான காரணமும் உண்டு. கொரொனா அதிகமாக பரவாமல் இருப்பதற்கு மக்கள் ஒரே இடத்தில் கூடாமல் இருப்பது, ஒரு சரியான வழியாக காணப்படுகிறது. 

சில கிறிஸ்தவர்கள் இது சரியானது அல்ல, நாம் ஒரு "கூட்ட மக்களாக சேர்ந்து தான் தேவனை ஆராதிக்க வேண்டும்", அதுவும் சர்சு என்று சொல்லக்கூடிய திருச்சபையில் சேர்ந்து ஆராதித்தால் தான் "அது உண்மையான ஆராதனையாக கருதப்படும்" என்று தவறாக விளக்கம் அளிக்கிறார்கள்.

இவர்கள் பார்க்க தவறிய விவரம் என்னவென்றால், எந்த இடத்தில் இரண்டு மூன்று நபர்கள் ஒருமனப்பட்டு ஆராதிக்கிறார்களோ, ஜெபிக்கிறார்களோ,  அந்த இடத்திலே நான் இருக்கிறேன் என்று இயேசு கூறியிருக்கிறார்.

மத்தேயு 18:19,20:

19. அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

20. ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

ஆகையால் நம்முடைய தற்கால சூழ்நிலைக்காக நாம் வீடுகளில் இருந்துக்கொண்டு தேவனை ஆராதிப்பது பரிசுத்த வேதாகமத்திற்கு எதிரானது அல்ல.

மேலும் ஆதி அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்தில் அனுதினமும் அதாவது வாரத்தின் ஒவ்வொரு நாளும் வீடுகளில் ஆராதனை செய்தார். மக்கள் இயேசு கிறிஸ்துவை அதிகமாக ஏற்றுக்கொண்ட படியினால் வாரத்திற்கு ஒருநாள் நியமித்து அந்நாளில் எல்லோரும் சேர்ந்து தேவனே ஆராதித்தார்கள். 

அப்போஸ்தலர் 2:46-47

46. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

47. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், தேவனை ஆராதிக்க வேண்டியது ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் தான் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லாத நாடுகளில், எந்த நாளில் அரசு விடுமுறை கொடுக்கிறதோ அந்த நாளில் கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் அரசு விடுமுறை வெள்ளிக்கிழமை ஆகும், எனவே அங்கு வாழும் கிறிஸ்தவர்கள், தேவனை வெள்ளிக்கிழமை ஆராதிக்கிறார்கள். எனவே, வீடுகளில் ஆராதிப்பது பைபிளுக்கு புறம்பானது அல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ரோமர் 14:5 

5. அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.

கிறிஸ்தவம் ஒரு குறுப்பிட்ட இடத்திற்கும், ஒருகுறிப்பிட்ட நாளுக்கும், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் கட்டுப்பட்ட மார்க்கமல்ல. நல்ல காலம், கெட்ட காலம், எமகண்டம், ராகு காலம் என்றுச் சொல்கின்றவைகளைப் பார்த்து வாழுங்கள் என்று பைபிள் நமக்கு கட்டளையிடவில்லை. இவைகள் முட பழக்கவழக்கங்கள்.  எல்லா நாட்களையும், எல்லா மணித்துளிகளையும் தேவன் படைத்துள்ளார். தேவன் நமக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கின்றார், வழியை நமக்கு சுலபமாக்கிக் கொடுத்திருக்கின்றார்.  இந்த குறிப்பிட்ட இடத்தில் நீ ஜெபித்தால் தான் பதில் கொடுப்பேன், இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஜெபித்தால் தான் வேண்டுதல்கள் ஏற்றுக்கொள்ளப்படும், இந்த குறிப்பிட்ட சடங்குகளை செய்து நீ என்னை தொழுது கொண்டால் தான் நான் பதில் கொடுப்பேன் என்று நம்முடைய தேவன் சொல்லவில்லை. 

எந்த இடத்திலே இரண்டு பேர் ஒருமனப்பட்டு தொழுது கொண்டாலும் அவரை துதித்தாலும் அந்த இடத்திலேயே அவர் வந்து அவர்களை ஆசீர்வதிப்பார், அது வீடாக இருக்கலாம், திருச்சபையாக இருக்கலாம். எனவே கிறிஸ்தவர்கள் இந்த காலகட்டத்தில் "ஐயோ நாங்கள் திருச்சபையில் தேவனை தொழுது கொள்ளவில்லையே என்று துக்கப்படத்தேவையில்லை, கேள்விகள் கேட்கத் தேவையில்லை, நம்முடைய தேவன் நம்முடைய வீட்டுக்குள் வந்து நம்முடைய ஜெபத்தைக் கேட்பார் ". 

எத்தனை நாட்கள் இப்படி இருக்கப் போகிறோம்? எத்தனை வாரங்கள் நாம் வீடுகளில் ஆராதனை செய்யப்போகிறோம்? என்று சிலர் கேள்விகள் கேட்கிறார்கள். எத்தனை மாதங்கள் நடந்தால் என்ன? எத்தனை நாட்கள் ஆனாலென்ன?  நம்முடைய ஆராதனைக்கு எந்த தடையும் இல்லையே. நாம் வீடுகளில் ஆராதித்தால் தேவன் ஏற்றுக்கொள்கிறார். எனவே கிறிஸ்தவர்களுக்கு இந்த ஊரடங்கு சட்டமானது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஒரு பெரிய தடையாக இல்லை.

ஒவ்வொரு வாரமும் குடும்பத்தோடு நண்பர்களோடு சபைக்குச் சென்று ஊழியர்களுடன் மகிழ்ச்சியோடு இறைவனை ஆராதித்த நாட்கள் போன்று வீடுகளில் ஆராதிப்பது இருக்காதே என்று நாம் வேதனைப் படுகிறோம், இது உண்மைதான். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லா சூழ்நிலையிலும் மன ரம்மியமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு வாழ்ந்து இருக்கவும் தெரிய வேண்டும், தாழ்ந்து இருக்கவும் தெரியவேண்டும் சபையில் ஆராதிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், வீடுகளில் ஆராதிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். சூழ்நிலைகள் நம்முடைய அமைதியைக் கெடுக்க நாம் இடம் கொடுக்கக் கூடாது.

நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை சமாளிப்பது பற்றி வேதம் கீழ்க்கண்டவாறு அழகாக எடுத்துக்காட்டுகிறது:

பிலிப்பியர் 4:11-13

11. என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

12. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.

13. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

நாம் வீட்டில் அடைப்பட்டு இருந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருந்து மனரம்மியமாக வாழ‌ கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே யாவற்றையும் செய்ய நமக்கு பலன் உண்டு. இதை நாம் விசுவாசிக்க வேண்டும் விசுவாசத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஒரு எச்சரிக்கை என்னவென்றால், இது கடைசி காலமாக இருக்கிறபடியால், இந்தக் கொரொனா போன்ற காரியங்கள் வெறும் ஆரம்பம் மட்டும் தான், இதைக்காட்டிலும் இன்னும் பெரிய பெரிய ஆபத்துகளை, சூழ்நிலைகளை சந்திக்க தயாராக வேண்டும். நம் குடும்ப நபர்களையும் தயார்படுத்த வேண்டும், திருச்சபை மக்களையும் தயார்படுத்த வேண்டும்.

கடைசியாக ஒரு முக்கியமான விவரம், நாம் வீடுகளில் இறைவனை ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதிப்பது நமக்கு துக்கத்தை கொடுக்க வேண்டாம், ஏனென்றால் இதனால் நாம் வாழும் சமுதாயத்திற்கு ஒரு நன்மை கிடைக்கும். சமுதாயத்திற்கு நன்மை செய்வதில் கிறிஸ்தவர்களின் பங்கு முதல் பங்காக இருக்க வேண்டும். நான் என் வீட்டில் இருப்பதினால் என் அயலாருக்கு, என் ஊர் காரருக்கு, என் சக குடிமகனுக்கு, நன்மை உண்டாகும் என்று சொன்னால், நிச்சயமாக நான் அதை செய்ய வேண்டும்.  இது என் கடமையும் கூட. 

எனவே, திருச்சபையில் அல்லாமல் வீடுகளில் தேவனை ஆராதிப்பது ஒரு குறுகிய காலத்துக்குத் தான் என்பதால் நாம் முழு ஒத்துழைப்பையும் நாட்டுக்கு கொடுக்க வேண்டும்.  அதே நேரத்தில் மற்றவர்களின் நன்மையும் இதில் அடங்கியுள்ளதால், இதனை இயேசு அங்கீகரிப்பார்.

2) குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சபையில் ஆராதனை செய்ய அரசு அனுமதிக்கக்கூடாதா?

இந்தக் கேள்விக்கான பதிலை படிப்பதற்கு முன்பாக மேலே கொடுத்த முதல் கேள்விக்கான பதிலை படித்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை இந்தக் கேள்வியை கேட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு தற்கால சூழ்நிலை சரியாக புரியவில்லை என்று சொல்ல முடியும்.

  • நாட்டில் ஒரு கொள்ளை நோய் மக்களை கொன்று கொண்டிருக்கிறது.
  • ஒரு மனிதனிடத்தில் இருந்து இன்னொருவருக்கு நோய் பரவிக் கொண்டு இருக்கிறது.
  • மக்கள் ஒரே இடத்தில் கூடுவதினால்,  இந்த நோய் அதிகமாக பரவுகிறது என்று  செய்திகளில் காண்கிறோம்.
  • இந்த நோய்க்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
  • பல நாடுகளில் பல ஆயிரம் மக்கள் இதுவரை இந்நோயினால் மரித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

இன்று நம்முடைய நிலை இது தான். மேற்கண்ட விவரங்களை படித்த பிறகும் மறுபடியும் இதே கேள்வியை நீங்கள் கேட்க விரும்பினால் "உங்களுக்கு புரிய வைக்க யாராலும் முடியாது,  இயேசுவே இறங்கி வந்தாலும், அவர் உங்களுக்கு விளக்கினாலும் உங்களுக்கு புரியாது".

ஒருவேளை சிலர் இப்படி சொல்லுவார்கள், இந்திய நாட்டிலே சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு, இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று. இது தவறான கருத்து,  வெறும் கிறிஸ்துவ ஆலயங்கள் மாத்திரமல்ல, மசூதிகளும், கோயில்களும், அலுவலகங்களும், தொழிற்சாலைகளும், பள்ளிகளும், மக்கள் கூடுகின்ற எல்லாவிதமான நிகழ்ச்சிகளையும் அரசு முடக்கி உள்ளது.

தற்போதைய சூழலில் ஊரடங்கு சட்டமானது இந்தியா முழுவதும், ஜாதி இன வேறுபாடின்றி போடப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய கேள்வி தவறானது.

3) எங்களை தேவாலயங்களில் தொழுதுக்கொள்ள‌ விடுங்கள், ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்கினால்  எங்களுக்குத் தானே வரும், உங்களுக்கு என்ன பிரச்சனை?

சிலர் இப்படியும் கேள்வி கேட்பார்கள். அருமையான சகோதர சகோதரிகளே, நீங்கள் எடுக்குற தீர்மானத்தினால் உங்களுக்கு மட்டுமே பிரச்சனை என்று சொன்னால், அதற்கு அரசாங்கம் விட்டுக் கொடுத்து விடும். புகை பிடிக்காதீர்கள், மது குடிக்காதீர்கள்,  இவைகள் உயிருக்கு ஆபத்து, குடி நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் என்று அரசு புகை பிடிப்பதற்கு எதிராக, விளம்பரம் செய்கிறது. இருந்தாலும், அதை கட்டாயப்படுத்துவது இல்லை. காரணம் என்னவென்றால், யார் அதை செய்கிறார்களோ அவர்களை அது பாதிக்கிறது. அதிகபட்சமாக அவர்கள் குடும்பத்தார்களையும், நண்பர்களையும் பாதிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த நாட்டை அது பாதிப்பதில்லை.  மறைமுகமாக நாட்டுக்கு பாதிப்பு இருந்தாலும், நேரடியாக இவைகளின் மூலமாக பாதிப்பில்லை என்பதால் அரசாங்கம் எச்சரிக்கை கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது. ஆனால் கொரோனா வைரஸின் நிலை இப்படி இல்லை.

நீங்கள் மசூதிகளில் தேவாலயங்களில் கோயில்களில் பல மக்களை சேர்த்துக்கொண்டு உங்கள் தெய்வங்களைத் தொழுது கொண்டால், உங்களில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா கொள்ளை நோய் வந்து இருக்குமானால், மற்றவர்கள் அனைவரையும் அது பாதிக்கும். அவர்களும் வேறு யார் யாரிடம் பேசுகிறார்களோ அவர்களையும் பாதிக்கும், அவர்கள் குடும்பத்தாரையும் பாதிக்கும். இப்படி நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நபரிலிருந்து அவரது வீட்டிற்கும், ஊருக்கும் அதன் பிறகு நாட்டிலுள்ளவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

இதனை சிறிது சிந்தித்தால், இக்காலங்களில்  உங்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு, நாட்டு மக்களுக்குப் பாடை கட்டிக் கொள்ள முடியாது. இது ஒரு தனி மனித பிரச்சனை அல்ல, ஒரு தனி இனத்தின் பிரச்சினை அல்ல, இது ஒரு நாட்டின் பிரச்சனை கூட அல்ல, உண்மையில் இது ஒட்டுமொத்த உலகத்தின் பிரச்சனை. 

நம் நாட்டில் கடைசி கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபர் சுகம் அடையும்வரை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. உங்கள் நம்பிக்கை உங்களோடு மட்டும் இருக்கட்டும், அதை காட்ட கூடிய நேரம் இது அல்ல, நாட்டில் ஊரடங்கு சட்டம் எடுத்து விட்ட பிறகு, உங்கள் நம்பிக்கையையும் வேறுவகையில் காட்டிக் கொள்ளுங்கள்.

4) ஆன்லைன் மூலமாக ஆராதனை செய்வது சரியா? அல்லது குடும்பமாக நாமே ஆராதனை செய்வது சரியா?

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய நாளிலிருந்து, கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப்பட்டன. அனேக திருச்சபைகளின் போதகர்கள், ஆன்லைன் மூலமாக அதாவது இன்டர்நெட்டின் மூலமாக நேரடியாக ஆராதனையை ஒளிபரப்புகிறார்கள். இணைய வசதி உள்ள விசுவாசிகள், அந்த நேரடி ஒளிபரப்பை  வீடுகளிலிருந்து பார்த்து, அவர்களும் அதே நேரத்தில் ஆராதனையில் பங்குபெறுகிறார்கள்.

தற்கால தொழில் நுட்பம் நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று இதனைச் சொல்லலாம். ஆனால் அனேக சபைகளில் இப்படிப்பட்ட இணையவசதி இல்லாத படியினால் அவர்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட சபை விசுவாசிகள் தங்கள் வீடுகளில் அமர்ந்துகொண்டு குடும்பமாக தேவனை ஆராதிக்கிறார்கள்.

வேறு சிலர் இந்த இரண்டையும் செய்யாமல், அரசு போட்ட சட்டத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்கள். தங்கள் திருச்சபைகளில் ஆராதனை செய்து போலீஸ்காரர்களிடம் மாட்டிக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் வருகிறார்கள். இது தவறான செயலாகும். இப்படி செய்வதை கிறிஸ்தவ போதகர்கள் தவிர்க்க வேண்டும்.

சரி நம்முடைய கேள்விக்கு வருவோம், ஆன்லைன் மூலமாக ஆராதனை செய்வது சரியா? என்று கேள்வி கேட்டால், இதில் தவறு ஏதுமில்லை என்பதுதான் நம்முடைய பதிலாக இருக்கிறது. அதே நேரத்தில் குடும்பமாக சேர்ந்து ஆராதனை செய்வதிலும் தவறில்லை. ஆதி திருச்சபை தொடங்கப்பட்ட காலத்தில் குடும்பமாக வீடுகளில் தினமும் ஆராதனை செய்தார்கள். மக்கள் பெருகப்பெருக, ஆராதனை செய்வதற்கென்று தனியாக ஒரு கட்டிடத்தை வாங்கி அங்கு ஆராதனை செய்தார்கள்.

இன்று இணையத்தின் மூலமாக தேவனுடைய ஊழியம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவ ஊழியர்கள் பேசிய பிரசங்கங்கள், உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லும் காரணியாக இன்டர்நெட் உள்ளது. எனவே யார் யாருக்கு இன்டர்நெட் மூலமாக ஆராதனை நடத்தி தங்கள் விசுவாசிகளுக்கு போதனை செய்ய முடியுமோ, அவர்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி இல்லாதவர்கள் குடும்பமாக தங்கள் வீடுகளில் ஆராதனை செய்துகொள்ளலாம்.

ஆனால் வீடுகளில் ஆராதனை செய்தாலோ அல்லது இன்டர்நெட் உதவியுடன் நேரடி ஒளிபரப்பு ஆராதனை செய்தாலோ சில அசவுகரியங்கள் உண்டாவது உண்மைதான்.

திருச்சபையில் எல்லோரோடும் சேர்ந்து ஒன்றாக பாடி ஆராதனை செய்து தேவனுடைய வார்த்தையை கேட்பதில் கிடைக்கும் திருப்தி ஆன்லைனில் ஆராதனை செய்வதில் கிடைப்பதில்லை. ஆனால் இப்போதைக்கு நமக்கு இதைத் தவிர்த்து வேறு வழியில்லை, என்பதால் சில வாரங்கள் அல்லது மாதங்கள் நாம் தேவனை ஆன்லைனில் தொழுது கொள்ள வேண்டும், அல்லது வீடுகளில் தொழுது கொள்ள வேண்டும்.

இப்படி ஆன்லைன் மூலமாக அல்லது வீடுகளில் சுயமாக ஆராதனை செய்வதனால் நம் தேவன் நம்மீது கோபம் கொள்வாரா? என்று சிலர் கேட்கிறார்கள். இது தேவையில்லாத கேள்வி, நம்முடைய சூழ்நிலையை நாம் அறிந்திருக்கிறதைக் காட்டிலும், அதிகமாக அதனை நன்கு அறிந்தவர் நம் இயேசு. எனவே இதைப்பற்றி கிறிஸ்தவர்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

எல்லா இடங்களிலும் தேவனை தொழுது கொள்ளும் காலம் வரும் என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான் 4:21). இப்பொழுது நம்முடைய நிலை என்னவென்றால்,  தேவனை ஆன்லைனிலும் தொழுது கொள்ளலாம் என்று ஆகிவிட்டது. வீடுகளிலும் தேவனை ஆராதிக்கலாம், ஆன்லைனிலும் தேவனை ஆராதிக்கலாம். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு விட்டபிறகு நாம் ஆன்லைன் மூலமாக தேவனை ஆராதிப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் நம் சகோதர சகோதரிகளோடு கூட சேர்ந்து தேவாலயத்தில் ஆராதிப்பது தான் சரியான ஆராதனை, மேலும் அதன் மூலமாக நம்முடைய சகோதர அன்பு பலப்படும். எனவே ஆன்லைனில் வீடுகளில் ஆராதனை செய்வது வெறும் குறுகியகால ஏற்பாடு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

5) கர்த்தரின் பந்தி (இராபோஜனம்) வீட்டிலேயே நாமே செய்யக்கூடாதா? இப்படி செய்வது தவறு என்று சிலர் கூறுகிறார்களே!

ஆன்லைன் மூலமாக ஆராதனை செய்வதும், குடும்பமாக அமர்ந்துக்கொண்டு ஆராதனை செய்வதும் சரியானது என்பதை பார்த்தோம். ஆனால், கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவது எப்படி? ஒரு பாஸ்டர் கர்த்தருடைய பந்தியில் இருக்கும் ரொட்டியையும், திராட்சை ரசத்தையும் நமக்கு ஆசிர்வதித்து கொடுப்பது தானே சபை வழக்கம். போதகர்கள் இல்லாமல் இதனை எப்படி செய்வது? ஆன்லைன் மூலமாக பாஸ்டர் தன் வீட்டிலிருந்து நேரடி ஒளிபரப்பு மூலமாக, இந்த கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறும்படி நம்மை கேட்டுக் கொண்டால்  நாம் இதனை செய்யலாமா? போன்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன.

ஆதிகால திருச்சபையில், கர்த்தருடைய பந்தியில் மக்கள் அனுதினமும் ஈடுபட்டார்கள். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம். அந்த காலத்திலே, போதகர் என்றோ சுவிசேஷகர் என்றோ, கண்காணிப்பாளர் என்றோ, பட்டங்கள் கொடுத்து மக்கள் ஊழியம் செய்யவில்லை. ஊழியம் பெருகிய போது, புதிய ஏற்பாட்டில் கர்த்தர் சபைக்கு தேவையான சட்டங்களை கொடுத்தபோது சபை பின்பற்றியது. அதுவரை நாம் இன்று காணும் போதகர், சுவிசேஷகர், பிஷப் போன்ற‌ பட்டங்கள் இல்லை. ஆக, இப்படிப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலங்களில், போதகர் இணையத்தின் மூலமாக கர்த்தரின் பந்தியில் பங்கு பெறும்படி உங்களை கேட்டுக்கொண்டால், நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்துகொண்டே கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறலாம்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு கூறும்படி நாம் இப்படி ஒவ்வொரு மாதமும் கர்த்தருடைய பந்தியில் ஈடுபடுகிறோம். இயேசுவின் சரீரத்திற்கு அடையாளமாக ரொட்டியையும், அவர் சிந்திய ரத்தத்திற்கு அடையாளமாக திராட்சை ரசத்தையும் எடுத்துக் கொள்கிறோம். ஒருவேளை நாம் வெளியே போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதினால் திராட்சை ரசம் கிடைக்கவில்லையானால், வேறு ஒரு பழரசத்தை நாம் பயன்படுத்தலாம். இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமென்றால், நம் இடத்தில் எந்த ஒரு பழரசம் இல்லை என்றால், அவைகளை வாங்குவதற்கு வாய்ப்பும் இல்லை என்றால், நாம் சாதாரண தண்ணீரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

நமக்கு தேவை அவருடைய சரீரத்திற்கு அடையாளமாக ஒரு திடப்பொருள், அதாவது ஒரு ரொட்டித்துண்டை பயன்படுத்தலாம், கிடைக்கவில்லை என்றால் பிஸ்கட்டை கூட பயன்படுத்தலாம். அதேபோல இரத்தத்திற்கு அடையாளமாக ஒரு திரவப்பொருள் தேவைப்படுகிறது, திராட்சை ரசம் கிடைத்தால் நல்லது அல்லது அது கிடைக்க வில்லையானால் வேறு பழரசத்தை பயன்படுத்தலாம். கடைசியாக எதுவுமே கிடைக்கவில்லை என்றால் தண்ணீரையாவது பயன்படுத்தலாம். இயேசுவின் சரீரம் திடப்பொருள் என்பதால் ஒரு ரொட்டியை பயன்படுத்துகிறோம், அவருடைய சிந்தப்பட்ட ரத்தம் திரவம் என்பதால், திரவமாக உள்ள எதையும் (பழ ரசங்கள், அல்லது தண்ணீர்) எடுத்துக்கொள்கிறோம்.

என் சபை போதகர் எனக்கு நேரடியாக கர்த்தருடைய பந்தியில் ரொட்டியும், திராட்சை ரசமும் கொடுத்தால் மாத்திரமே நான் செய்வேன் என்று நீங்கள் நம்பினால், அது உங்கள் நம்பிக்கை, நீங்கள் அப்படியே செய்யுங்கள். ஆனால், பைபிள் அப்படி சொல்லவில்லை என்பதை மனதில் வைக்கவும்.

ஒருவேளை அடுத்த மூன்று மாதங்கள் அல்லது  ஆறு மாதங்கள் இப்படியே ஊரடங்கு இருந்தால், நீங்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்கள் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறாமல் இருப்பீர்களா?

அதேபோல, திராட்சை ரசமும் ரொட்டியும் இருந்தால்தான் நான் பந்தியில் பங்கு பெறுவேன், வேறு பழத்தின் ரசத்தின் மூலமாக பங்குபெற மாட்டேன் எந்த நீங்கள் சொல்வீர்களானால், அதுவும் உங்கள் விருப்பம் தான்.

கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதென்பது கிறிஸ்துவத்தில் உள்ள ஒரு மத சடங்கு ஆச்சாரம் அல்ல.  அதற்கு மாறாக‌ இயேசுவின் தியாக பலியை ஞாபகப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல் தான் இது. இயேசுவின் தியாக பலியை அனுதினமும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம், இப்படித்தான் திருச்சபையில் செய்யப்பட்டது.

மற்ற மதங்கள் சொல்வது போன்று, கட்டாயமாக இந்த இடத்தில் மட்டுமே, இந்த வகையில் மட்டுமே, இந்த பொருட்களைக் கொண்டே, இந்த காரியங்கள் செய்ய வேண்டும் என்ற மூடப்பழக்கங்கள் கிறிஸ்தவத்தில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இதனை ஏற்றுக் கொள்வதற்கு சிலருடைய மனம் இடம் கொடுக்காது அப்படிப்பட்டவர்கள் இயேசுவின் நற்செய்தி நூல்கள் தொடங்கி, புதிய ஏற்பாடு முழுவதையும் நிதானமாக படித்துப் பாருங்கள், அப்பொழுது உங்களுக்கு தெரியவரும். கிறிஸ்தவம் ஒரு மதமல்ல, கிறிஸ்தவம் என்பது தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் உறவு முறை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

உறவுமுறையில் அதாவது அன்புக்கு இடையில் சடங்கு ஆச்சாரங்களுக்கு  இடமில்லை. முழு இருதயத்தோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும் ஒருவர் வைக்கும் அன்பு தான் முக்கியம் என்பதை பைபிளை கூர்ந்து கவனித்து படித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஆக, ஆன்லைன் மூலமாகவும் நாம் கர்த்தருடைய‌ பந்தியில் பங்கு பெறலாம். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் இயேசுவின் தியாக பலியை நாம் நினைவுகூர்ந்து நம்முடைய குற்றங்களை இன்னொரு முறை கர்த்தருக்கு முன்பாக அறிக்கையிட்டு, நம்முடைய சகோதர சகோதரிகளோடு ஐக்கியப்பட்டு, ஒருவர் குற்றத்தை ஒருவர் மன்னித்து, கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டு, பங்கு பெறுவது தான் கர்த்தருடைய பந்தி, மத சடங்கு அல்ல.

Date: 11th April 2020


இதர தலைப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்