இயேசு “மனுஷகுமாரன்” என்று முஸ்லிம்களிடம் அழுத்தமாகச் சொல்லுங்கள்!

(Tell Muslims Jesus Is the Son of Man)

அண்மையில் ஒரு மசூதிக்குச் சென்றபோது, ஒரு முஸ்லீம் இமாம், “நான் இறைவன் என்று உங்கள் இயேசு பைபிளில் எங்கே கூறுகிறார்?” என்று கேட்டார். இந்த கேள்விக்கு பல சிறந்த வழிகளில் பதில் அளிக்க எனக்குத் தெரியும். ஆனாலும் பின்வரும் வித்தியாசமான அணுகுமுறையில் பதில் சொல்வது, முஸ்லிம்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இயேசு தம் தெய்வீகத்தன்மைக்கு சான்றாக, தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப்பெயரை நான் இங்கு மேற்கோள்களாக முஸ்லிம்களுக்கு காட்ட விரும்புகிறேன்: அந்த பட்டப்பெயர் "மனுஷ குமாரன்" என்பதாகும். ஆம், பல இடங்களில் இயேசு தம்மை "மனுஷ குமாரன்" என்று அழைத்துகொண்டார்:

பார்க்க: மத்தேயு 12:40, மாற்கு 10:45, லூக்கா 18:31, யோவான் 9:35 இன்னும் பல வசனங்களை குறிப்பிடலாம்.

இயேசு தம்மை "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்டது எப்படி அவரது "தெய்வீகத்தன்மைக்கு" சான்றாக இருக்கும் என்று முஸ்லிம்கள் ஆச்சரியப்படலாம்.  என்னைப் பார்த்து, உனக்கு நீயே குழியை வெட்டிக் கொள்கிறாயா? என்று கேட்கலாம். இயேசு தம்மை "மனுஷ குமாரன்" என்று சொல்வதினால், அது அவரின் மனித தன்மையைத் தானே காட்டுகிறது, தெய்வீகத்தன்மையை எப்படி அது வெளிப்படுத்தும் என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு வரும். அந்த சந்தேகத்தைத் தான் இந்த சிறிய கட்டுரையில் தீர்க்கப்போகிறோம்.

முஸ்லிம்களின் மேற்கண்ட கேள்வி எனக்கு புரிகிறது. "மனுஷகுமாரன்" என்றுச் சொல்வது, தெய்வீகத்தன்மையை  வெளிப்படுத்தாமல், அதற்கு பதிலாக, நம்மைப்போல மனித பெற்றோரின் மூலமாக பிறந்தவர் என்பதைத் தான் அது குறிக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில், நான் "மனுஷ குமாரன்", நீங்களும் " மனுஷ குமாரன்", மற்றும் இந்த பூமியில் உள்ள அனைவரும் "மனுஷ குமாரன்" தான். இது போல "இயேசுவும் ஒரு மனுஷ குமாரன்" என்றுச் சொல்வது எந்த இறைத்தன்மையையும் அது நிருபிப்பதாக இல்லையே! என்ற சந்தேகம் நியாயமானது தான்.

"மனுஷகுமாரன்" என்ற வார்த்தை "தான் ஒரு மனிதன் என்று சொல்வது போன்று" தோன்றினாலும், அதற்கு ஒரு தெளிவான இரண்டாவது அர்த்தமும் உள்ளது, அதாவது "மனுஷ குமாரன்" என்ற வார்த்தையில் தெய்வீகமும் சேர்ந்துள்ளது. இயேசு தம் முழு தெய்வீக அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு திட்டத்தை வைத்திருந்தார். தம் தெய்வீகத்தின் வெளிப்பாடாகவும், தமக்கு மிகவும் பிடித்த பட்டப்பெயராகவும் "மனுஷகுமாரன்" என்று தம்மைத் தாமே அழைக்க தொடங்கினார்.

இயேசு தம்மை "மனுஷகுமாரன்" என்று அழைப்பதை ஆய்வு செய்தால், அது பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான பட்டப்பெயர் என்பதை நாம் கவனிக்கமுடியும். தானியேல் 7:13-14 வசனங்களில் "மனுஷகுமாரன்" என்பவர் உன்னதமானவராக அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் “பரலோக மேகங்களுடன்” வருகிறார், உலகில் உள்ள அனைத்து இராஜ்ஜியங்களையும், வல்லமைகளையும், இராணுவங்களையும் ஆளும் சக்தி படைத்தவராக இந்த "மனுஷகுமாரன்" வர்ணிக்கப்படுகின்றார். மேலும், அவர் நித்திய நித்தியமாக இருப்பவராக காட்டப்படுகின்றார். உலக மக்கள் அனைவரும் இவரை வணங்குபவர்களாக காட்டப்படுகிறார்கள், இவர்  மனிதரல்ல ஒரு தெய்வீக  புருஷராக இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டில்  மனுஷகுமாரன்

தானியேல் 7:13-14

13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

14. சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

அதனால்தான், இயேசு தம்மை "மனுஷகுமாரன்" என்று அழைத்துக்கொண்ட போது, பழைய ஏற்பாட்டின் மேற்கண்ட‌  வேதவசனங்களை அறிந்திருந்த யூத மத தலைவர்கள் அவரது கூற்றின் தெய்வீகத்தை, அதன் பொருளை சரியாக புரிந்துக்கொண்டார்கள்.

புதிய ஏற்பாட்டில் மனுஷகுமாரன்

மத்தேயு 26: 63. இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

64. அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பிரதான ஆசாரியன் இந்த பதிலைக் கேட்டபோது, அவர் தனது ஆடைகளைக் கிழித்து, இயேசு தேவதூஷணம் (தெய்வக்குற்றம்) செய்ததாக அறிவித்தார், இயேசு தம்மை தேவனுக்கு சமமாக ஆக்கிவிட்டார். இதனால், இயேசு பின்னர் சிலுவையில் அறையப்பட்டார். (மேலும் பார்க்க: யோவான் 5:18).

தானியேல் புத்தகத்தின் மேற்கண்ட வசனத்தின் படி 'மனுஷகுமாரனின் சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்", அவர் தான் சர்வவல்லவரான தேவன். இதே போன்று, இயேசு "மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் காண்பீர்கள்" என்றார்.  தானியேல் தீர்க்கதரிசி கண்ட தரிசனத்தில் காணப்பட்ட அந்த மனுஷகுமாரன் நான் தான் என்று இயேசு சொன்னவுடன், பிரதான ஆசாரியருக்கு விஷயம் புரிந்தது, உடனே அவர் மீது தேவதூஷண குற்றம் சாட்டினார்.

எனவே, மனுஷகுமாரன் என்று இன்று நாம் சொல்லும்போது, அது மனிதத்துவத்தை குறிக்கும், ஆனால், முதல் நூற்றாண்டில், யூதர்கள் மத்தியிலே மனுஷகுமாரன் என்றுச் சொன்னால், அது தெய்வத்துவத்தை குறிப்பதாக இருந்தது. இயேசுவை சிலுவையில் அறைய இந்த ஒரு காரணம் யூதர்களுக்கு போதுமானதாக இருந்தது.

இந்த அணுகுமுறையை நான் விரும்புவதற்கான ஒரு காரணம் உண்டு, அதாவது, " இயேசு மனுஷகுமாரன்" என்று தம்மை அழைத்துக்கொண்டார் என்று நாம் பேசும் போது, முஸ்லிம்கள் உடனே நம்முடன் உரையாட தொடங்குவார்கள். நாம் ஒரு பலவீனமான பாயிண்டை பேச ஆரம்பித்துள்ளோம் என்று அவர்கள் எண்ணுவார்கள். ஆனால், பலமுள்ள வாதம் என்பதை நாம் வேத வசனங்களை எடுத்துக்கூறி அவர்களுக்கு விளக்கமுடியும்.

பெரும்பாலான முஸ்லிம்கள், ஒருபோதும் இயேசுவைப் பற்றி படித்ததில்லை. இயேசு ஒரு தீர்க்கதரிசி என்று முஸ்லிம்களால் நம்பப்பட்டாலும், அவர்கள் ஒரு போதும்  மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் நற்செய்தி நூல்களை படித்து, இயேசுவைப் பற்றி என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று அறிய விரும்புவதில்லை. நற்செய்தி நூல்களை படித்த முஸ்லிம்களை காண்பது அரிது. உண்மையில், நான் பேசிக் கொண்டிருந்த இமாம் கூட நற்செய்தி நூல்களை படித்ததில்லை.

இந்த அணுகுமுறையின் மூலமாக, 'இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே' என்று  நம்பிக்கொண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு, அவரைப் பற்றி மேலும் பல விவரங்களை சொல்லமுடியும். இதில் இன்னொரு பயனும் உள்ளது, அதாவது 'இயேசு தான் இறைவன் என்றால், அவர் ஏன் தம்மை மனுஷகுமாரன்' என்று அழைத்துக்கொண்டார் என்ற முஸ்லிம்களின் பொதுவான கேள்விக்கும் இதன் மூலம் பதில் சொல்லமுடியும். முடிவாக, இயேசு தம்மை மனுஷகுமாரன் என்றுச் சொல்லும் போது, தம்முடைய மனிதத் தன்மையையும், அதே நேரத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்து எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த, வரவிருக்கின்ற கர்த்தரும் தாம் என்பதையே குறிக்கிறார்.

ஆங்கில மூலம்: https://www.str.org/w/tell-muslims-jesus-is-the-son-of-man?inheritRedirect=true

தேதி: 3rd Oct 2020


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்